இந்தியா இளைஞர்கள் நாடு என கூறும் உலகம் - குடியரசுத் தலைவர் புகழாரம்!

18-வது தேசிய சாரணர் ஜம்போரி கூட்டத்தை தொடங்கிவைத்தார் குடியரசுத் தலைவர்.

Update: 2023-01-06 02:13 GMT

ராஜஸ்தானின் பாலி நகரில் இந்திய சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் 18-வது தேசிய ஜம்போரி கூட்டத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய சாரணர் மற்றும் வழிகாட்டிகள் மிகப்பெரிய தன்னார்வலர்களைக் கொண்ட, அரசியல் சாராத சீருடையணிந்த இளைஞர் அமைப்பு மற்றும் கல்வி இயக்கம் என்றார். சாதி, மதம், மற்றும் இன வேறுபாடின்றி, சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் நற்பண்புகளுக்கு இந்த இயக்கம் வித்திடும் என்று குறிப்பிட்ட அவர், 63 லட்சத்திற்கும் மேற்பட்ட சாரணர் மற்றும் வழிகாட்டிகளைக் கொண்ட இந்திய இயக்கம், உலகின் மிகப்பெரிய சாரணர் அமைப்புகளில் ஒன்றாகத் திகழுவதாகவும் புகழாரம் சூட்டினார்.


அர்ப்பணிப்பு மற்றும் சேவையை முன்னிறுத்தும் இந்த உறுப்பினர்களின் பணிகள், மனித குல நலனை மேம்படுத்துகிறது என்று தெரிவித்தார். மனதளவில் வலிமைபெறுதல், அறியாமையை விலக்கி நீதிக்கு உழைத்தல், தனிநபர் அல்லாமல், சமூதாய மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்து உழைத்தல் ஆகிய வாக்குறுதிகளின் அடிப்படையில், சாரணர்கள் தங்கள் பயணத்தை தொடங்குவதாக திரௌபதி முர்மு குறிப்பிட்டார். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய சாரணர் இயக்கத்தினர், ஈடுஇணையில்லா துணிச்சலுடன் சமூகத்திற்கு தொண்டாற்றியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுகொள்ளுதல், கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான வழிமுறைகளை மக்களை ஏற்கச் செய்வதில் சாரணர் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா இளைஞர்கள் நாடு என உலகம் வர்ணிப்பதாகக் குறி்ப்பிட்டக் குடியரசுத்தலைவர், இளைஞர்களே நம் தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கிறார்கள் என்றும் கூறினார். எனவே, சாரணர்கள் தங்களின் தன்னம்பிக்கையுடன் முன்னேறினால் வெற்றி அவர்களை தொடரும் என்றும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News