உலக பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா வருவது நிச்சயம்- பிரதமர் மோடி!
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முதல் மூன்று இடத்திற்குள் வருவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 12ஆம் தேதி நாட்டிலேயே நீளமான அடல் சேது கடல் பாலத்தை திறந்து வைக்க மும்பை வந்து இருந்தார்.மேலும் நாசிக்கிலுள்ள காலா ராமர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்து தூய்மை பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஒரு வார காலத்தில் இரண்டாவது முறையாக அவர் நேற்று மராட்டியம் வந்தார் .அவர் சோலாப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் சோலாப்பூர் கும்பாரியில் ராய் நகரில் பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கட்டப்பட்ட 15 ஆயிரம் வீடுகளை பயனாளர்களிடம் ஒப்படைத்தார்.
பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் கைத்தறி தொழிலாளர்கள், வியாபாரிகள் , விசைத்தறி தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், டிரைவர்கள், பழைய பொருள் சேகரிப்பவர்கள் ஆவர். இது தவிர மாநிலம் முழுவதும் பிரதம மந்திரி யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட 90 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை மாநிலத்துக்கு பிரதமர் அர்ப்பணித்தார். இதே போல 2000 கோடி மதிப்பிலான எட்டு புதிய திட்டப் பணிகளையும் அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் .விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை நான் பார்த்தேன். நான் சிறுவனாக இருந்த போது இது போன்ற வசதியான வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. (இதை பேசிய போது மோடி கண்கலங்கினார் சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு அவர் மீண்டும் தன் பேச்சை தொடங்கினார்) மக்களின் கனவு நிறைவேறும் போது அது நமக்கு மகிழ்ச்சியை தரும். மக்களின் ஆசைதான் எனது மிகப்பெரிய சாதனை. வருகிற 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் போது வீடு கிடைத்தவர்கள் அதில் விளக்கு ஏற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஏழ்மையை ஒழிக்கும் ஜோதியாக அது இருக்க வேண்டும்.