உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருக்கும் இந்தியா - மத்திய இணை அமைச்சர் முருகன் எல்.பெருமிதம்.!
பிரதமர் மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதே சான்றாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய மக்கள் தகவல் தொடர்பகம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்து விழாப் பேருரையாற்றிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், “ஜி-20 உச்சிமாநாட்டிற்கு தலைமைத்துவத்தைப் பெற்றிருப்பதன் மூலம் உலக அளவில், இந்தியாவின் பெருமையை பறைசாற்றும்.
விடுதலை இந்தியாவின் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள நாம், விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலர் அறியப்படாமல் இருந்து வருவதை அறிந்து அவர்களைக் கண்டறிந்து போற்றும் விதமாக இந்தப் புகைப்படக் கண்காட்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 75 நாட்களில் 75 அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்பு நிகழ்வான ‘ஸ்வராஜ்’ ஒளிபரப்பப்பட்டது. அதில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஒண்டிவீரன் சிறப்புத் தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு பல்வேறு துறைகளில் உத்வேகத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது. பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ - பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தையை படிக்க வைப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்புடன், கல்வி அறிவும் அளிக்கப்பட்டு வருகிறது.
Input & Image courtesy:PIB