இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அதிபர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி லட்சக்கணக்கான மக்கள் இலங்கை அதிபர் மாளிகை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பு நகரில் உள்ள அதிபர் இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் முன்னேறுவதை அறிந்த கோத்தபயா தன்னுடைய குடும்பத்தாருடன் பாதுகாப்பாக தப்பிச்சென்றுவிட்டனர். ஏற்கனவே பொதுமக்களின் போராட்டத்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தன்னுடைய பதவியை நேற்று (ஜூலை 9) ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றோம். இந்த கடினமான தருணத்தில் கடப்பதற்கு முயற்சி செய்யும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும். தற்போது இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை இந்தியா அறிகிறது. இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிப்பதற்கு இதுவரையில் 3.8 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கியுள்ளது. இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: BBC