காலசக்கரத்தின் சுழற்சியால் உலகுக்கு பல முன் உதாரணங்களை நிர்ணயித்த இந்தியா- பெருமிதத்துடன் மோடி!
உலக நாடுகளுக்கெல்லாம் பல முன் உதாரணங்களை நிர்ணயிக்கும் வகையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலகுக்கு பல முன் உதாரணங்களை இந்தியா நிர்ணயிக்கும் வகையில் காலச்சக்கரம் சுழன்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடவுள் ஸ்ரீராமர் ஆட்சி செய்த போது அவருடைய செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதுபோல அயோத்தியில் பாலராமர் அரியணை ஏறியுள்ள நிலையில் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான இந்தியாவின் புதிய பயணம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் ஸ்ரீ கல்கி தாம் கோயில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பின்னர் பேசியதாவது:-
அயோத்தியில் ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான ஜனவரி 22-ஆம் தேதி நாட்டுக்கான புதிய கால சக்கரம் சுழல தொடங்கியது. கடவுள் ஸ்ரீ ராமர் ஆட்சி செய்த போது அவருடைய செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதுபோல அயோத்தியில் பாலராமர் அரியணை ஏரி உள்ள நிலையில் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான இந்தியாவின் புதிய பயணம் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியா என்ற கோயிலை மீண்டும் கட்டும் பணியை கடவுள் எனக்கு பணித்துள்ளார். ஒருபுறம் நமது புனித தலங்கள் மறு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நகரங்கள் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை பெற்று வருகின்றன.
கோவில்கள் கட்டப்பட்டு வரும் நேரத்தில் நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்படுகின்றன .நமது பழங்கால சிற்பங்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டுவரப்படும். அதே வேளையில் சாதனை அளவில் வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவுக்கு வருகின்றன. கால சக்கரம் இந்தியாவுக்கு சாதகமாக சுழன்றுள்ளது. புதிய சகாப்தம் நமது கதவுகளை தட்டுகின்றன என்பதற்கான சாட்சி தான் இந்த மாற்றங்கள் .முதன் முறையாக பிறரை பின்பற்றும் நாடாக அல்லாமல் பல முன் உதாரணங்களை உலகுக்கு நிர்ணயம் செய்யும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது. முதன்முறையாக தொழில்நுட்பம் மற்றும் எண்ம தொழில்நுட்பத் துறைகளில் சாத்தியக்கூறுகளின் மையமாக இந்தியா பார்க்கப்படுகிறது .