இலங்கையில் தற்போது வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியாளர்களை மக்கள் துறத்தி வரும் நிலையில், அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மக்கள் போராட்டத்தை தொடர்ந்து தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மீண்டும் மக்கள் புரட்சி வெடித்தது. அதன்படி கடந்த 9ம் தேதி மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது.
மேலும், கடந்த 13ம் தேதி அதிகாலை நேரத்தில் நாட்டை விட்டு கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தாருடன் மாலத்தீவில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்துக் கொண்டே நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அறிவித்து உத்தரவிட்டார். தனது ராஜினாமாவை இலங்கை சபாநாயகருக்கு அனுப்பினார். மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பியோடினார்.
இந்நிலையில், இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இது குறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய தூதர் இன்று காலை சபாநாயகரை சந்தித்தார். தற்போது முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கை பாராட்டினார். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
Source, Image Courtesy: Daily Thanthi