23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடிக்கப்பலை மீட்டது இந்திய கடற்படை!

23 பாகிஸ்தானியர்களுடன் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

Update: 2024-04-01 17:49 GMT

பாகிஸ்தானியர்கள் 23 பேர் பயணித்த ஈரான் நாட்டு மீன்பிடிக்கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய நிலையில் அந்தக் கப்பலை இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. அரபிக் கடலில் ஏடன் வளைகுடா அருகில் சோகோட்ரோ தீவு உள்ளது. இந்த தீவில் இருந்து 90 கடல் மைல் தொலைவில் அல் கம்பர் என்ற ஈரான் மீன்பிடிக்கப்பலை கடற்கொள்ளையர்கள் வியாழக்கிழமை கடத்தினர். இதை அடுத்து அரபிக்கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ எம் எஸ் சுமேதா போர்க்கப்பல்  அப்பகுதிக்கு விரைந்து கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மீன் பிடிக்கப்பலை போர்க்கப்பல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடைமறித்தது.

கூடவே ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்ட ஐ என் எஸ் திரிசூல் போர்க்கபளும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது .சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற மீட்பு நடவடிக்கை முடிவில் கப்பலை கடத்திய ஒன்பது கடற்கொள்ளையர்கள் சரணடைந்தனர். கப்பல் பாதுகாப்பாளர்கள் 23 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். கடற்படையின் சிறப்பு குழுவினர் அக்கப்பலை முழுவதுமாக ஆய்வு செய்தது .தொடர்ந்து மீன்பிடி செயல்பாடுகளிலும் ஈடுபடும் வகையில் அந்த கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது .

இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 'ஆபரேஷன் சங்கல்ப் 'என்ற பெயரில் பாதுகாப்பு பணியில் கடற்படை ஈடுபட்டு வருகிறது .கடற்கொள்ளையர்கள் தடுப்பு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை தடுத்தல் ஆகிய பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். சரணடைந்த கடற்கொள்ளையர்கள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. கடற்கொள்ளை சம்பவங்களை தடுக்க கடற்கொள்ளை தடுப்புச் சட்டம் கடந்த 2022ல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது..


Sound :Dinamani

Similar News