ஈஷாவில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்!
ஈஷாவில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இங்கு 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலை அமைக்கப்பட்டது. ஈஷா அறக்கட்டளை சார்பாக இங்கு நவராத்திரி விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறார். இந்த மனித உடலமைப்பையும், இது எவ்வாறு பூமி, சூரியன், சந்திரன் மற்றும் தெய்வீகத்தின் பல்வேறு அம்சங்களோடு தொடர்பில் இருக்கிறது என்பதையும் ஆழமாக கவனித்து, அதில் இந்த கலாச்சாரம் தனது வேரை ஊன்றியிருக்கிறது. நமது திருவிழாக்களை நாம் எப்போது, எப்படி கொண்டாடுகிறோம் என்பதிலும் இது பிரதிபலிக்கிறது. நவராத்திரி என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள்.
அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. சந்திர சுழற்சியின் முதல் ஒன்பது நாட்கள் பெண் தன்மையாக கருதப்படுகிறது. தெய்வீகத்தின் பெண் தன்மையாகக் கருதப்படும் தேவிக்கு, இது மிகச் சிறப்பான நேரம். ஒன்பதாவது நாள் நவமி என்று வழங்கப்படுகிறது. பௌர்ணமியை ஒட்டிய ஒன்றரை நாட்கள் சமநிலையான காலம். மீதமுள்ள 18 நாட்கள் இயற்கையிலேயே ஆண் தன்மையானதாக இருக்கிறது. மாதத்தின் பெண்மை மிளிரும் காலம் தேவியைப் பற்றியதாக இருக்கிறது. எனவேதான் இந்த கலாச்சாரத்தில், நவமி வரையிலான அனைத்து வழிபாடுகளும் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது. எனவே இந்த புதிய சிறப்புகளை கொண்டாடும் வகையில், ஈஷாவில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 3-ஆம் நாளான செப்.28 ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் 'மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்' என்ற தலைப்பில் நடன நாடக நிகழ்ச்சியை நடத்தினர். இதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.