2 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை சித்திரைத் திருவிழா: களைகட்டும் மாசி வீதிகள்!
மதுரை சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் மாசி வீதிகளில் கலைகட்டும் மக்கள் கூட்டம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா வழக்கம்போல் நடத்தப்படவில்லை. ஆனால் இந்த வருடம் நேரடியாக பக்தர்கள் ஆரவாரத்தோடு நடைபெற உள்ளது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் சித்திரை திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். விழா தொடங்கியதில் இருந்தே மதுரை மிகவும் பரபரப்புடன் காணப்படும். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதிஉலா நடைபெறும். இதில் பக்தர்கள், சுவாமி வேடமணிந்த சிறுவர்-சிறுமிகள் என ஏராளமானோர் அணி வகுத்து செல்வார்கள். மேலும் பல்வேறு வேடமணிந்த சிறுமிகள் கோலாட்டம் ஆடிய படியும், பாட்டு பாடியபடியும் செல்வார்கள். இதனைக் காண மதுரை மாநகர பகுதிகள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமி வீதிஉலா நடைபெறும் மாசி வீதிகளில் திரண்டு விடுவார்கள்.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சுவாமி வீதி உலா 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கம்போல் கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் நடைபெறும் சுவாமி வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Input & Image courtesy: Malaimalar News