சாதி அரசியலை சிதறடித்து வெற்றி பெற்ற மோடி!

சாதி அரசியலை சிதறடித்து வெற்றி பெற்ற மோடி!

Update: 2019-05-24 13:23 GMT


1990 களில் சமாஜ்வாதி, ராஷ்டிரிய லோக் தள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஜாதியை அடிப்படையாக கொண்டே அரசியல் செய்து வருகின்றன. சமாஜ்வாதி யாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை நம்பியும், பகுஜன் சமாஜ் கட்சி தலித்களின் ஓட்டுக்களை நம்பியும் மாறி மாறி ஆட்சி செய்தன.


உத்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ., மட்டும் 62 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ.,வை வீழ்த்த மெகா கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.






வரலாற்றில் முதல் முறையாக பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அமேதி தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்.பி.,யாக இருந்த ராகுல் காந்தி இந்த முறை ஸ்மிருதி இரானியிடம் படுதோல்வி அடைந்துள்ளார். ரேபரேலி தொகுதியில் சோனியாவும் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.


உ.பி.,யை பொறுத்த வரை 45 சதவீதம் ஓபிசி.,யினரும், 9 சதவீதம் யாதவர்களும், 21 சதவீதம் தலித்களும் வசித்து வருகின்றனர். இது தவிர ஜாதவ் மற்றும் அதன் உட்பிரிவு இனங்களில் தலித்களை உள்ளடக்கிய 56% க்கும் மேற்பட்ட ஓட்டு சதவீதம் உள்ளது.





பாசிக்கள் உள்ளிட்ட இனத்தவர்களின் ஓட்டுக்கள் 16 சதவீதம் உள்ளன. இந்த ஓட்டு சதவீதங்களை சரியாக கணித்த பா.ஜ., யாதவர்கள் அல்லாத, ஜாதவ்கள் அல்லாத, ஓபிசி.,க்கள், தலித்தகள், பிராமணர்கள், ராஜபுத்திரர்களின் ஓட்டுக்களை குறிவைத்து 2014 ல் பிரசாரம் செய்தது. அது வெற்றியும் பெற்றது.


இதே வியூகத்தை 2017 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., கையாண்டு, மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. 2017 க்கு பிறகு நடந்த 3 தொகுதி லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ.,வின் இந்த கணிப்பு வெற்றி பெற்றது. 2014 தேர்தலில் பா.ஜ., மட்டும் 42.3 சதவீத ஓட்டுக்களை பெற்றது.





இது சமாஜ்வாதி பெற்ற 22.2 சதவீதம் மற்றும் பகுஜன் சமாஜ் பெற்ற 19.6 சதவீத ஓட்டுக்களையும் சேர்த்த பாதிக்கும் அதிகமான ஓட்டுக்கள் ஆகும். இதே முறையை பா.ஜ., இந்த தேர்தலிலும் கையாண்டுள்ளது. பாரபட்சமின்றி அனைத்து ஜாதி ஓட்டுக்களையும் அதிக அளவில் பெற்றுள்ளது.


சாதியை மட்டும் நம்பி இத்தனை காலம் அரசியல் செய்து வந்த மாயாவதிக்கும், அகிலேசுக்கும் இது பெரிய பாடம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.




Similar News