சுற்றுலாவிற்கு வருகை தர வேண்டி இந்தியர்களிடம் மன்றாடும் மாலத்தீவு அமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததன் எதிரொலியாக மாலத்தீவு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்தியாவிடம் மாலத்தீவு பெருமளவில் சுற்றுலா வரவேண்டி மன்றாடிக் கொண்டிருக்கிறது.

Update: 2024-05-08 10:33 GMT

இந்தியாவுக்கும் பிரதம நரேந்திர மோடிக்கும் எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் அவதூறான கருத்துக்களை தொடர்ந்து இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் மாலத்தீவுகள் பகிர்ந்து கொண்ட வரலாற்றை நினைவூட்டி மாலத்தீவும் புதிய அரசாங்கமும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் ஃபைசல் கூறினார்.

எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்தே செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம். சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில் சுற்றுலாவில் இந்தியர்களை தயவு செய்து ஒரு பகுதியாக இருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்தது என்று இப்ராஹிம் ஃபைசல் தெரிவித்துள்ளார் .

முன்னதாக இந்தியாவுக்கு எதிராகவும் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை அவதூறாக சித்தரித்தும் மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து சர்ச்சை வெடித்தது. அந்த அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட போதும் இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவு ஆட்சியாளர்களின் நிலைப்பாடு மாறாத நிலையில் கணிசமான இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலாத் திட்டத்தை ரத்து செய்தனர். இதனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் மாலத்தீவு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 42 சதவீதம் குறைந்தது .

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மாலத்தீவு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 73,785 ஆக இருந்தது. இதுவே 2024ல் 42,638 ஆக குறைந்தது. மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் மார்ச் 4 அன்று வெளியிட்ட அறிக்கையின் படி மாலத்தீவு சுற்றுலாவின் டாப் டென் தேசங்களின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்திற்கு சறுக்கிச் சென்றது. இதனால் சுற்றுலாவை பெரிதும் சார்ந்து இருக்கும் பொருளாதாரமாகக் கொண்டிருக்கும் மாலத்தீவு பலமான அடி வாங்கியது. இதனால் இந்தியாவிடமும் இந்தியர்களிடமும் சரணாகதி ஆகும் அளவிற்கு மாலத்தீவு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


SOURCE :Dinaboomi

Similar News