அடுத்த ஐந்தாண்டுகளில் ஊழல்வாதிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை பாயும்- பிரதமர் மோடி!
அடுத்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
மேற்கு வங்காள மாநிலம் கூச் பேகரில் ராஷ் மேளா மைதானத்தில் நேற்று பா. ஜனதாவின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நட.ந்தது. அதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
இந்தியா கூட்டணிக்கு ஒடுக்கப்பட்டவர்கள் மீது அக்கறை கிடையாது. நாம் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளோம். உடனே அச்சட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன. ஆனால் அன்னை இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிப்பது மோடியின் உத்தரவாதம். இந்தியா கூட்டணி பொய் மற்றும் வஞ்சக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 'நான் ஊழலை நீக்குவோம் 'என்று சொல்கிறேன். எதிர்கட்சிகள் ஊழல்வாதிகளை பாதுகாப்போம் என்று சொல்கின்றன.
ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும் ஏழைகள் நீதி பெறுவதையும் நான் உறுதி செய்வேன். அடுத்து ஐந்து ஆண்டுகளில் ஊழல் வாதிகள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரத்திற்கு பிறகு 60 ஆண்டுகளாக காங்கிரஸ் மாடல் அரசை நாடு பார்த்தது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசை பார்த்துள்ளது. நம் நாட்டை முன்னேற்ற வேண்டும் .நான் கடினமான முடிவுகள் எடுக்கும் வலிமையான தலைவர் என்று உலகம் அங்கீகரித்துள்ளது. ஊழல் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து நாடு விடுபட மோடி கடினமான முடிவுகள் எடுத்துள்ளான். மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்ய கடினமான முடிவுகள் எடுத்துள்ளான் .
மோடிக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன .ஒட்டுமொத்த நாடும் என் குடும்பம் .140 கோடி இந்தியர்களும் என் குடும்பம் .மேற்கு வங்காள மாநிலம் சந்தோஷ்காளியில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கருணை காட்ட வில்லை. குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்தியது .
மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு பா ஜனதா வெற்றி பெறுவது அவசியம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிறுத்தப்படுவதற்கும் பா.ஜனதா வெற்றி அவசியம். சந்தோஷ்காளி குற்றவாளிகளை தண்டிக்க பா.ஜனதா உறுதிபூண்டுள்ளது. அவர்கள் தங்கள் வாழ்நாளின் மீதி காலத்தை சிறையில் கழிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :Daily thanthi