'அறிவியல் கல்வி மையமாக இந்தியாவை மாற்றுவதே என் இலக்கு'- பிரதமர் மோடி!
அறிவியல் கல்விக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதே எனது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பத்தாண்டுகளில் அறிவியல் என்ற தலைப்பில் மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகமும் இந்திய அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை என்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பும் ஓர் அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கையை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் வியாழக்கிழமை வெளியிட்டார். அறிவியல் தொழில்நுட்பத்து துறையில் குறிப்பாக உள்கட்டமைப்பு பாதுகாப்பு எரிசக்தி துறை கனரக தொழிற்சாலைகள் ஆகியவை தொடர்பாக இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது . இந்த அறிக்கையில் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வலுவான தன்னிறைவைப் பெற்ற தேசமாக இந்தியாவை உருவாக்குவதற்கு வரும் 2047 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் முக்கியமானதாகும். இதில் இளைஞர்கள் உள்ளிட்ட அறிவியல் சமூகம் முக்கிய பங்காற்றும் .செயற்கை நுண்ணறிவு ,ஆழ்கடல் மற்றும் விண்வெளி ஆய்வு, நிலவின் தென் துருவத்தில் சந்திரன்யான்-3 தரையிறங்கியது ,கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தடுப்பூசியை உருவாக்கியது, புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை விரிவாக்குவதற்கான அர்ப்பணிப்பு உட்பட அனைத்து முயற்சிகளும் நம் நாட்டை தன்னிறைவடைவதற்கான இலக்கை நோக்கியே பயணிக்கின்றன.
பல்வேறு துறைகளில் நமது விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வை மேற்கொண்டுள்ளனர் .நமது இளைஞர்களிடையே அறிவியல் உணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வித்துறையில் மத்திய அரசு மிகப்பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அறிவியல் கற்றலுக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதே எனது இலக்கு என்று பிரதமர் மோடி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
SOURCE :Dinamani