மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்துங்க.. அப்புறம் பேசுங்க..

Update: 2023-11-24 01:36 GMT

மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக ஏழை மக்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பகவந்த் குபா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர், தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள மளமஞ்சனூர் புதூரில் நடைபெற்ற நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கினார்.


அப்போது பேசிய அவர், கிராமப்புற ஏழை மக்களுக்கு அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களைப் பெறாமல் விடுபட்டவர்களும் பெறவேண்டும் என்ற வகையில், வளர்ச்சி அடைந்த பாரதம் சபத யாத்திரை வாகனம் கிராமங்கள் தோறும் மக்களை நாடிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.


மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் 81 கோடி பேர் பயனடைந்து உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏழ்மை நிலையில் இருந்து 32 லட்சம் பேர் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மதராஸ் உர நிறுவனத்தின் சார்பில் ட்ரோன்கள் மூலம் திரவ யூரியாக்களை பயிர்களுக்கு தெளிப்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதராஸ் உர நிறுவன துணை மேலாளர் துளசிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News