தமிழக அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.. மத்திய அமைச்சர் கூறியது எதை?

Update: 2023-11-28 01:09 GMT

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சபத யாத்திரைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூடத்தில் பங்கேற்று அந்நிறுவனத்தின் மேம்பாட்டிற்கான நடைமுறைகள் குறித்து மறுஆய்வு செய்தார். புதிய கல்விக் கொள்கை, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் கற்றல் மற்றும் ஆராய்ச்சி, மாணவர்கள் பரிமாற்றம் போன்ற பல வழிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுத்துள்ளது என்று தெரிவித்தார்.


இதுவே தான்சானியாவில் ஜான்சிபரில் ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு வளாகத்தை தொடங்க வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசும் கல்வித்துறைக்கான நிதியை 2020-21ம் ஆண்டை விட 2023-24ம் ஆண்டு 13.68% அதிகரித்து கிட்டத்தட்ட 1லட்சத்து 13ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சபத யாத்திரையை கடந்த 15ந்தேதி தொடங்கி வைத்தார் எனக் கூறினார். தமிழ்நாட்டில் , LED திரைகளுடன் கூடிய 130 வேன்கள், மத்திய மக்கள் தொடர்பகம், பெட்ரோலிய அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், மத்திய உர அமைச்சகம் போன்றவற்றின் ஒத்துழைப்போடு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று, மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கும், 1400 சிறு நகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் இந்த வேன்கள் மக்களிடையே நேரடியாக தகவல்களை கொண்டு சேர்க்கும் என்று கூறிய அமைச்சர், சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றிய தகவல்களை அவை வழங்குகின்றன என்று கூறினார். ஏழை மக்களுக்கு மின்சாரம், இலவச எரிவாயு இணைப்புகள், வேளாண் கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மத்திய அரசு வழங்கி வருவதாக அவர் கூறினார்.


ரசாயன உரங்களையும், பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தாமல், இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளுமாறு ஏழை விவசாயிகளுக்கு தேவையான தகவல்களையும் இந்த வேன்கள் அளித்து வருவதாக அவர் கூறினார். தமிழ்நாட்டில் தற்போது, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த வேன்கள் வலம் வருவதாகக் கூறிய அமைச்சர், இந்த வேன்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருவதாகத் தெரிவித்தார். இந்த வேன்கள் மூலம் மக்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைத்து, அதன் மூலம் அவர்கள் பயனடைந்து வருவதால், மாநில அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் அப்போது கேட்டுக்கொண்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News