‘காசி தமிழ் சங்கமம்’ இரண்டாம் கட்டமாக நடைபெறுவதையொட்டி, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் விண்ணப்பப் பதிவுக்கான இணைய முகப்பை (Portal) திங்களன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆர்வமுள்ள நபர்கள் www.kashitamil.iitm.ac.in என்ற கேடிஎஸ் இணையமுகப்பில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8 டிசம்பர் 2023. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின்கீழ் இந்த இரண்டாம் கட்ட நிகழ்வை புனிதமிக்க மார்கழி மாத முதல்நாளான 17 டிசம்பர் 2023 அன்று தொடங்கி 30 டிசம்பர் 2023 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவில் இரு முக்கிய கற்றல், கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான வாழ்க்கைப் பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முதல் நிகழ்வைப் போன்றே, பல்வேறு தரப்பு மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இம்முறையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்றுவர 8 நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், மதம் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்களாகப் பிரித்து அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, காவிரி என புனித நதிகளின் பெயரிடப்படும். வரலாறு, சுற்றுலா, மதஆர்வமுள்ள இடங்களுக்குச் செல்வதுடன், இக்குழுவினர் உத்தரப்பிரதேச மக்களை அவர்களின் பணியிடங்களிலேயே தொடர்பு கொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள்.
Input & Image courtesy: News