உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்கு இந்திய பெண்கள்-டாப் இடத்தில் நிர்மலா சீதாராமன்!

அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் இந்தாண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 4 பெண்கள் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

Update: 2023-12-06 05:45 GMT

அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பிஸ்னஸ் இதழான ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது 2023ஆம் ஆண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 4 பெண்கள் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.


இந்த லிஸ்டில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ஊடக பிரபலங்கள் எனப் பலரும் இடம் பெற்றுள்ளனர். இந்த லிஸ்டில் டாப் இடங்களில் இருப்போர் யார்.. இதில் உள்ள இந்தியர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 20ஆவது ஆண்டாக இந்தாண்டும் இந்த லிஸ்டை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


அதேபோல அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளனர். டாப் 3 இடங்களில் கடந்தாண்டுக்கும் இந்தாண்டிற்கும் மாற்றம் எதுவும் இல்லை.அதேபோல இந்த பட்டியலில் அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். பொழுதுபோக்கு துறையில் இருக்கும் ஒருவர் டாப் 5 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும். கடந்த 2022இல் 79வது இடத்தில் இருந்து ஸ்விப்ட் ஒரே ஆண்டில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் சமீபத்தில் நடத்திய ஈராஸ் இசைப் பயணம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அவரது சொத்து மதிப்பும் 1.1 டாலர் பில்லியனை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 4 பெண்கள் இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் பவுர்புல் பெண்ணாக இருக்கிறார். அவர் இந்த லிஸ்டில் 32ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் சிஇஓ ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (60வது இடம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மொண்டல் (70வது இடம்), மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா (76 இடம்) ஆகியோரும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.


நிர்மலா சீதாராமன் கடந்த 2019 மே மாதம் மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தையும் அவரே கவனித்து வருகிறார். தீவிர அரசியலில் வருவதற்கு முன்பு அவர் இங்கிலாந்தின் வேளாண் பொறியாளர்கள் சங்கம் மற்றும் பிபிசி உலக சேவை ஆகியவற்றில் இருந்ததாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. அதேபோல தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

Similar News