தமிழக வெள்ள நிவாரணப் பணி.. மத்திய அரசின் நடவடிக்கைகளை லிஸ்ட் போட்ட நிதியமைச்சர்..

Update: 2023-12-23 01:51 GMT

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் சென்னையில் இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் புதுதில்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று அவர் விளக்கமளித்தார். தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 18-ம் தேதி அதி கனமழை பெய்த நிலையில், அன்று மதியமே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தாம் நேரில் சந்தித்து கூடுதல் உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறினார்.


அதை ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து விதமான உதவிகளையும் வழங்க உடனடியாக உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 21ம் தேதி வரை தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்த்தாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என அவர் கூறினார். மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகளைச் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.


விமானப்படை மூலமாக 5 ஹெலிகாப்டர்களும், கடற்படை மூலமாக 3 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படை மூலம் ஒரு ஹெலிகாப்டரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவை 70 இடங்களில் மீட்புப்பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். தேசிய மீட்புப் படை, ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல்படை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின், அமைச்சகங்களுக்கு இடையிலான குழு உடனடியாக அந்த மாவட்டங்களுக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார். இதே போல், இந்த மாதத்தில் மிக்ஜாம் புயலின்போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின் குழு உடனடியாக சென்னை சென்றதாகவும் அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News