ஜனவரி 2ஆம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை புரிய உள்ளார். இதனால் திருச்சி டி. வி. எஸ்.டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை 8000 போலீசாரும், விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பிரதமரின் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் துவங்கி வைக்க உள்ள திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலில் ஜனவரி 2ஆம் தேதி விமான நிலையத்தில் காலை 10 மணிக்கு திருச்சிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38 வது பட்டமளிப்பு விழாவில் 10:30 மணிக்கு பங்கு பெற்று அங்கிருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
அதனை அடுத்து, திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பகல் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Source : Dinamalar