தமிழக பொறியியல் கல்வித் துறையில் புதிய மைல்கற்கள்.. பிரதமர் மோடியினால் நிகழ்ந்த மாற்றம்..
கல்வி உள்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மாற்றி அமைக்கும் முக்கிய நிகழ்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, இன்று 2024 ஜனவரி 2-ம் தேதி திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் "அமெதிஸ்ட்" என்ற விடுதியைத் திறந்து வைக்கிறார். 2019 - 20-ம் கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதன் காரணமாக அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு இடமளிக்கும் வகையில் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 41 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விடுதி மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்பட்டதாகும். நவீனத்துவம் மற்றும் கல்விச் சிறப்பின் கலங்கரை விளக்கமாக இது திகழ்கிறது.
என்.ஐ.ஆர்.எஃப்-பின் "இந்திய தரவரிசை - 2023"-ன் படி, பொறியியல் கல்வித் துறையில் சிறந்த முன்னோடியாக அனைத்து என்ஐடி-களிலும் திருச்சிராப்பள்ளி என்ஐடி தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மதிப்புமிக்க முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொறியியல் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இது 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2023-24 ஆம் கல்வியாண்டில் வைரவிழா ஆண்டைத் தொடங்கவுள்ள இந்நிறுவனத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் "அமெதிஸ்ட்" விடுதி திறக்கப்படுவது ஒரு சிறந்த மைல்கல்லாக அமைகிறது.
1.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 253 அறைகளுடன் 506 மாணவர்கள் தங்கும் வகையிலும், எஃப்.டி.டி.ஹெச் தொழில்நுட்பத்துடன், வைஃபை வசதியுடன் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதி நான்கு மாடிகளைக் கொண்டதாகும். "அமெதிஸ்ட்" விடுதி திறக்கப்படும் நிலையில், இது மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த சூழலை வழங்குவதில் திருச்சிராப்பள்ளி என்ஐடி-யின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. பொறியியல் கல்வித் துறையில் புதிய மைல்கற்களை இந்த நிறுவனம் படைக்கத் தயாராக உள்ளது.
Input & Image courtesy:News