துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு.. நவீன காலத்தில் மிகச்சிறந்த தலைவர் மோடி..
10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பதாகும். இதில் 34 நாடுகள் மற்றும் 16 அமைப்புகள் பங்கேற்கின்றன. வடகிழக்குப் பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாநாட்டை ஒரு தளமாகவும் பயன்படுத்துகிறது.
பல்வேறு தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினர்.bஜப்பானின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் தோஷிஹிரோ சுசுகி பேசுகையில், பிரதமரின் வலுவான தலைமைத்துவத்தைப் பாராட்டினார். நாட்டில் உற்பத்தித் தொழில்களுக்கு வழங்கப்படும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தியா இப்போது உலகின் 3-வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது என்று கூறிய சுஸுகி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பிரதமரின் முற்போக்கான அணுகுமுறைகளை எடுத்துரைத்தார். உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தமது நிறுவனத்தின் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார். எத்தனால். பசுமை ஹைட்ரஜன், மாட்டு சாணத்திலிருந்து உயிரி எரிவாயு உற்பத்தி போன்ற நடவடிக்கைகள் மூலம் மாசுப்பாட்டைக் குறைக்கும் திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் திரு முகேஷ் அம்பானி பேசுகையில், துடிப்புமிக்க குஜராத் இன்று உலகின் மிகவும் மதிப்புமிக்க முதலீட்டு உச்சி மாநாடாக உள்ளது என்று கூறினார். ஏனெனில் இது போன்ற வேறு எந்த உச்சி மாநாடும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்தார். இது நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். துடிப்புமிக்க குஜராத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும் தாம் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். தாம் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டிருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்த அம்பானி, குஜராத்தின் சிறந்த மாற்றங்களுக்காகப் பிரதமரைப் பாராட்டினார்."இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் நவீன காலத்தின் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர்” என்று அவர் கூறினார். இந்தியாவின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி என்று அவர் தெரிவித்தார். உலகமே அவரைப் பாராட்டுகிறது என்றும் சாத்தியமற்றதை அவர் சாத்தியமாக்குகிறார் என்றும் அம்பானி கூறினார்.
Input & Image courtesy: News