திருவிழா கோலம் பூண்ட அயோத்தி.. நாடு முழுவதிலும் இருந்து குவியும் பக்தர்கள்..
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா, அயோத்தியை பெங்களூர் மற்றும் கொல்கத்தாவுடன் இணைக்கும் விமான சேவைகளைக் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வடக்கில் தில்லி, மேற்கில் அகமதாபாத் ஆகிய நகரங்களுடன் அயோத்தி ஏற்கனவே நேரடி விமானப் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டதாகக் கூறினார். தற்போது கிழக்கில் கொல்கத்தா, தெற்கில் பெங்களூரூ ஆகிய நகரங்களுடனும் அயோத்தி இணைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 17 நாட்களுக்குள், அயோத்தி, நாட்டின் நான்கு முனைகளுடனும் இணைக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலுக்குச் செல்ல நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கு இந்த விமான இணைப்புகள் உதவும் என்று அவர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கும் என்றும், 2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 19 ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த விமான சேவைகளைத் தொடங்கியதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரசுக்கு நன்றி தெரிவித்தார். உத்தரப்பிரதேச அரசின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இந்த முன்முயற்சி சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த நகரங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் வும்லுன்மங் வுல்னம் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Input & Image courtesy: News