அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள அரசியல் சாசன நகல் நமது குழந்தைகளுக்குத் தெரியாமல் இருப்பது குறித்து குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் வேதனை தெரிவித்துள்ளார். இந்த மூல ஆவணத்தில் 22 சிறிய ஓவியங்கள் அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இந்த நுண்ணோவியங்கள் மூலம், அரசியலமைப்பின் நிறுவனர்கள் நமது ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கலாச்சாரத்தின் சாரத்தை வெளிப்படுத்தினர் என்று கூறினார். ஆனால், குழந்தைகள் அதைப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், அது புத்தகங்களின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறிய அவர், நமது நாட்டின் நிறுவனர்கள் நமக்கு வழங்கியுள்ள, அரசியலமைப்பை அதன் உண்மையான வடிவத்தில் கிடைக்கச் செய்ய முன்முயற்சி எடுக்குமாறு மத்திய சட்ட அமைச்சரை அவர் வலியுறுத்தினார்.
இந்தியா குடியரசாக மாறிய 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில், "நமது அரசியலமைப்பு சட்டம் நமது கௌரவம்" இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசு துணைத்தலைவர், அடிப்படை உரிமைகள் நமது ஜனநாயகத்தின் சாராம்சம் என்றும், ஜனநாயக மாண்புகளின் பிரிக்க முடியாத அம்சங்கள் என்றும் விவரித்தார். ஒருவர் அடிப்படை உரிமைகளை அனுபவிக்காவிட்டால், அவர் ஜனநாயகத்தில் வாழ்வதாகக் கூற முடியாது என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், அரசியலமைப்பின் இந்தப் பகுதியில், ஸ்ரீ ராமன், சீதா மற்றும் லட்சுமணன் அயோத்திக்குத் திரும்பும் சிறிய ஓவியம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
அயோத்தியில் குழந்தை ராமரின் கும்பாபிஷேக விழாவை ஒரு வரலாற்றுத் தருணம் என்று விவரித்த தன்கர், "விதியுடன் முயற்சித்து, நவீனத்துடன் முயற்சித்த பிறகு, 2024 ஜனவரி 22, அன்று நாங்கள் தெய்வீகத்துடன் முயற்சி செய்தோம்" என்று கூறினார். ராமர் கோயில் கட்டுவதற்கான பாதை மிக நீண்ட மற்றும் வேதனையான செயல்முறை என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், அது சட்டத்தின்படி அடையப்பட்டுள்ளது என்றும், இது சட்டத்தின் ஆட்சியை நாடு நம்புவதை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.