பெண் விஞ்ஞானிகளுக்கு உரிய அங்கீகாரம்.. வரவேற்பு அளித்து அழகு பார்த்த மோடி அரசு..
இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனது இல்லத்தில் குடியரசு தின வரவேற்பு வழங்கினார். மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இஸ்ரோவின் 225-க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு குடியரசு தின வரவேற்பு அளித்தார். உலகளாவிய பாராட்டைப் பெற்ற 140 கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரையும் இஸ்ரோவுடன் இணைத்த சந்திரயான், ஆதித்யா எல் 1 மற்றும் பிற சமீபத்திய வெற்றிகளைச் சித்தரிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற இஸ்ரோ அலங்கார ஊர்திக்கு தலைமை தாங்கிய புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த வரவேற்பில் பங்கேற்றனர். இஸ்ரோவின் அலங்கார ஊர்தி அணிவகுப்புக்கு எட்டு பெண் விஞ்ஞானிகள் தலைமை தாங்கினர், அதே நேரத்தில் இந்த நிகழ்வுக்காக அழைக்கப்பட்ட 220 பெண் விஞ்ஞானிகள் தங்கள் கணவர்களுடன் குழுவை உற்சாகப்படுத்தினர். பெங்களூரு, அகமதாபாத், திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோ மையங்களில் இருந்து பெண் விஞ்ஞானிகள் இந்த நிகழ்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய விண்வெளி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, கடந்த காலத்தின் தளைகளிலிருந்து விண்வெளித் துறையை விடுவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடியால் இந்த பெருமைமிக்க நாள் சாத்தியமானது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். கடமைப் பாதையில் இஸ்ரோவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வந்தபோது பார்வையாளர்கள் தன்னிச்சையாக கைதட்டி வரவேற்றதை மிகவும் கௌரவமாகவும் பாக்கியமாகவும் உணர்ந்ததாக பெண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தங்களது சாதனைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், தில்லியில் தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்பால் தாங்கள் திக்குமுக்காடிப் போனதாகவும், அதனால் தில்லியின் குளிரைக் கூட மறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இஸ்ரோவின் அணிவகுப்பு வாகனம் குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்தை நெருங்கத் தொடங்கியபோது, இஸ்ரோ - "வளர்ந்த இந்தியாவின் அடையாளம்" என்ற விவரிப்பு இருந்தது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Input & Image courtesy: News