விடாமுயற்சியும், கடின உழைப்பும் முக்கியம்.. ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு..

Update: 2024-02-02 03:52 GMT

தங்களின் எண்ணங்களை செயல்படுத்துவதற்கு மாணவர்களுக்குக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம் தேவை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆரோவில்லில் பாரத் நிவாஸ் பூமிகா அரங்கத்தில் நடைபெற்ற ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அவர், இன்றைய காலகட்டத்தின் புதிய சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் தினந்தோறும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். தங்களது அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தனது குறிக்கோளை எட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.


மாணவர்கள் தங்களைப் பற்றிய விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனம் தளரக்கூடாது. மகிழ்ச்சியான மனநிலைதான் உற்பத்தித் திறனை அதிகரிக்கும். தன்னுள் இருக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இந்த நிகழ்ச்சி வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை மேம்படுத்தும் வகையிலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் அண்டை மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு மனித நேயம் குறித்தும் பொதுநலன் குறித்தும் சிறப்பான அனுபவங்கள் ஏற்படுகின்றன.


இந்த நிகழ்ச்சி ஆரோவில்லில் நடைபெறுவது மிகவும் சிறப்பானதாகும். ஏனென்றால் சர்வதேச நகரமான இந்த ஆரோவில்லில் மகான் அரவிந்தரின் ஒற்றுமை மற்றும் அமைதி கருத்தாக்கங்கள் ஏற்கனவே நிரூபித்து காட்டப்பட்டுள்ளன என்று டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். ஆரோவில்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிலுள்ள ஏழு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாணவர்கள் ஒரு வார காலம் ஆரோவில்லில் தங்கி இருந்து பயிற்சி பெறுவார்கள். முன்னதாக ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி வரவேற்றார். நிறைவில் ஆரோவில் அறக்கட்டளையின் துணைச் செயலர் சுவர்ணாம்பிகை நன்றி கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News