ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை.. திறந்து வைத்த பிரதமர் மோடி.. ஜம்மு மக்கள் மகிழ்ச்சி..
ஜம்முவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்தப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். ஜம்மு- காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்ற உறுப்பினர் ஜுகல் கிஷோர் சர்மா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 12-ஆக அதிகரித்துள்ளது என்றார். இதேபோல், இந்தக் காலகட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் எம்.பி.பி.எஸ் இடங்கள் 500 முதல் 1300 வரை இரு மடங்காக அதிகரித்துள்ளன என்று கூறினார். 2014 க்கு முன்னர் ஜம்மு-காஷ்மீரில் முதுநிலை மருத்துவ இடங்கள் இல்லை எனவும் தற்போது இந்த யூனியன் பிரதேசத்தில் 650 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இப்பகுதியில் 35 புதிய செவிலியர் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் செவிலியர் இடங்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மத்திய அரசு 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஜம்மு மக்கள் சிறப்பு மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக இனி தில்லிக்குச் செல்ல வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.