தமிழ்நாட்டின் துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம்.. ஏன் தெரியுமா.?

Update: 2024-02-29 02:39 GMT

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது என்று மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக, சென்னையில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக விளக்கமளித்தார்.


அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மிகவும் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார். பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்திலிருந்தே கடல்வழி வணிக வரலாற்றைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றும் அவர் குறிப்பிட்டார். சாகர்மாலா, பாரத்மாலா, பிரதமரின் விரிவு சக்தி பெருந்திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் மிகுந்த கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் 45-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்கு ரூ. 16,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ரூ. 93,671 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் ரூ.35,247 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 167 மில்லியன் டன்னிலிருந்து 338 மில்லியன் டன்னாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கப்பலின் செயல்பாட்டு நேரம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News