பெண் கல்விக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. பெண்களுக்காகவே பள்ளிகள், கல்லூரிகளை தொடங்கி நடத்திக் கொண்டு வருகின்றோம். பெண்கள் உயர்கல்வி கற்க முன்வரவேண்டும். படித்த பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதற்காக படித்த பெண்கள் தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனில் மானியம் வழங்கப்படுகின்றது என்று முதலமைச்சர் ரங்கசாமி மேலும் தெரிவித்தார்.
சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் புதுச்சேரி பாரதி வீதி திருவள்ளுவர் நகர் ஸ்ரீசாய்பாபா திருமண மண்டபத்தில் நடைபெறும் 6 நாள் மகளிர் சக்தி என்ற மையக்கருத்திலான ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியபோது முதலமைச்சர் ரங்கசாமி இவ்வாறு தெரிவித்தார். பெண்கள் சக்தி மிகவும் முக்கியமானது. இன்று பெண்கள் சாதனைப் பெண்களாக திகழ்கின்றார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது அரசியல் பங்கேற்பில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்கள் சிரமம் இல்லாமல் வாழ்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தருகின்றது. குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. புதுவை அரசு முன்னரே பெண்களுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்துள்ளது.
இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக திகழ்கின்றனர். பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று முதலமைச்சர் ரங்கசாமி மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே. பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை தலைமை வகித்தார். மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல இயக்குனர் திருமதி மா லீலா மீனாட்சி நோக்க உரையாற்றினார்.
Input & Image courtesy:News