பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த துணிச்சலான முடிவு.. அமித் ஷா பாராட்டு..

Update: 2024-03-09 11:29 GMT

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தைத் திறந்து வைத்து, புதுதில்லியில் தேசிய கூட்டுறவு தரவுத்தளம் 2023 என்னும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் பி.எல். வர்மா, கூட்டுறவு அமைச்சகச் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூடானி மற்றும் பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அமித் ஷா தமது உரையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக கூட்டுறவு தரவுத் தளத்தின் தொடக்க விழா நடை பெறுவதால், கூட்டுறவுத் துறை, அதன் விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்துதலுக்கான மிக முக்கியமான திட்டத்தை இன்று தொடங்குகிறது என்று கூறினார்.


இன்றைய நிகழ்ச்சித்திட்டம் கூட்டுறவுத் துறையை விரிவு படுத்துவதையும் அதற்கு உத்வேகம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆயிரக் கணக்கான மக்களின் பல ஆண்டுகால கடின உழைப்புக்குப் பிறகு, இந்த வெற்றியை இன்று நாம் அடைந்துள்ளோம் என்று அமித் ஷா குறிப்பிட்டார். 1960-களுக்குப் பிறகு, ஒரு தேசியக் கொள்கையின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கூட்டுறவு இயக்கங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பின் தேவை உணரப்பட்டது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு துணிச்சலான முடிவை எடுத்து, கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கி, அதை வெற்றிபெறச் செய்தார் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மயமாக்கப் பட்டுள்ளன என்றும், அனைத்து மாநிலங்களும் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க பொதுவான துணை விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.


இன்று அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகின்றன. மோடி அரசு மாதிரி விதிமுறை ஆலோசனைகளை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்ட அமித் ஷா, இதன் கீழ், கூட்டுறவு சங்கங்கள் பல பரிமாணங்களைக் கொண்டதாக பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, இந்த மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொண்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் விரிவாக்கத்திற்கு வழி வகுத்துள்ளன என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News