வளர்ச்சி, பாரம்பரியம் நமது இரட்டை என்ஜின் அரசின் தாரக மந்திரம்.. பிரதமர் மோடி பெருமிதம்..
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில் மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளை உள்ளடக்கியது. நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மாநிலத்தின் 200 வெவ்வேறு இடங்களிலிருந்து 2 லட்சம் பேர் காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். கோலாகாட் மக்கள் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றியதை குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, மக்களின் அன்பும் பாசமும் தனது மிகப்பெரிய சொத்து என்று கூறினார். சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியத் துறைகள் தொடர்பான சுமார் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நாட்டுக்கு அர்ப்பணித்தும் இருப்பது அசாமின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு தாம் மேற்கொண்ட பயணம் பற்றிப் பேசிய பிரதமர், இந்தப் பூங்கா ஒரு தனித்துவமான தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் என்று கூறியதுடன், அதன் பல்லுயிர் பெருக்க அமைப்பை சுட்டிக்காட்டினார். 70 சதவீத ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காசிரங்காவில் உள்ளன என்று அவர் கூறினார். சதுப்பு நில மான், புலி, யானை மற்றும் காட்டு எருமை போன்ற வனவிலங்குகளைக் கண்ட அனுபவம் குறித்தும் அவர் பேசினார். அலட்சியம் மற்றும் குற்றங்கள் காரணமாக காண்டாமிருகம் எவ்வாறு ஆபத்தில் சிக்குகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 2013-ம் ஆண்டில் ஒரே ஆண்டில் 27 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
தற்போதைய அரசின் முயற்சியால் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். மக்கள் அதிக அளவில் இந்த தேசியப் பூங்காவிற்கு வருகை தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வீர் லச்சித் போர்புகானின் சிலையை இன்று திறந்து வைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், வீர் லச்சித் போர்புகன் அசாமின் வீரம் மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளம் என்றார். 2002-ம் ஆண்டில் புதுதில்லியில் அவரது 400-வது பிறந்த நாளை கொண்டாடியதை அவர் நினைவு கூர்ந்தார்.
Input & Image courtesy: News