வசூல் சாதனை படைத்த சரக்கு மற்றும் சேவை வரி.... நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்..!
கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு உச்சத்தை எட்டி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதள பக்கத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூபாய் 2 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு ரூபாய் 43 ஆயிரத்து 846 கோடி மத்திய ஜிஎஸ்டி ஆகவும், ரூபாய் 53 ஆயிரத்து 538 கோடி மாநிலங்களுக்கான ஜி எஸ் டி ஆகவும், ரூபாய் 99 ஆயிரத்து 623 கோடி மத்திய மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆகவும், ரூபாய் 13 ஆயிரத்து 250 கோடி செஸ் வரி என கடந்த ஏப்ரல் மாதத்தில் வரியானது வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு மாநிலமும் ஜிஎஸ்டி வரி எவ்வளவு வசூலித்தது என்பது குறித்த விவரங்களும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக ரூபாய் 37 ஆயிரத்து 671 கோடி மகாராஷ்டிராவில் வசூலாகியுள்ளதாகவும் இந்த வசூல் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்பொழுது 13 சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம் வசூல் சாதனைகளை படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி உத்திர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக ரூபாய் 12,210 கோடி வசூலை பெற்று தமிழகம் ஜிஎஸ்டி வசூலில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட இந்த வரியானது கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் ஆறு சதவிகிதம் அதிகமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Source : The Hindu Tamil thisai