சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத மதுரை கலைஞர் நூலகம்.. உள்ளே வந்த மழை நீர்..
மதுரையில் பெய்த சிறு மழைக்கே மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ்த் தளத்தில் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் அங்குள்ள இரு பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தற்போது மழை ஆங்காங்கே பெய்து தான் வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் மதுரையில் கடந்து சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதில் மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூலகத்திற்குள் மழை நீர் புகுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆக வருகிறது.
மதுரையில் ரூ.215 கோடியில் நத்தம் சாலையில் பிரம்மாண்டமாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த 2023 ஜூலை 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு பிரிவுகளில் ஏகப்பட்ட புத்தகங்களும் இருக்கின்றன.
இருப்பினும், என்ன தான் அதிநவீன நூலகமாக இருந்தாலும் மழை பெய்தாலே உள்ளே மழை நீர் வந்துவிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படிப் பெய்த மழையில் தான் சில புத்தக ரேக்குகள் துருப்பிடித்தன. அதேபோல கீழ்த் தளத்தில் அமைந்துள்ள பார்க்கிங் பகுதியிலும் மழை தண்ணீர் தேங்கியது. மழை பெய்யதால் தற்போது தற்காலிகமாக இரண்டு தளங்கள் மூடப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy:News