இந்தியாவிற்கு இருமுறை ரகசிய பயணம் மேற்கொண்ட கனடா உளவு அதிகாரி... தீவிரமாகும் ஹர்தீப் கொலை வழக்கு!

Update: 2024-06-11 08:39 GMT

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். மேலும் இந்த கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பேசினார். மேலும், இந்தியாவிற்கான தூதரக அதிகாரியையும் உடனடியாக கனடாவை விட்டு வெளியேறும்படி கனடா தெரிவித்தது. கனடாவின் இந்த அதிரடி நகர்விற்கு பிறகு இந்தியாவும், கனடாவிற்கான தூதரக அதிகாரியை இந்தியாவிலிருந்து வெளியேற்றியது. 

இந்த சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே இருந்த ராஜ்ய உறவில் விரிசல் ஏற்பட்டது. அது மட்டுமின்றி கனடா பிரதமர் ஜஸ்டின் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த வழக்கில் கனடா காவல்துறையினர், கரண்பிரீத் சிங், கமல்பிரீத் சிங், கரண் பிரார், அமர்தீப் சிங் ஆகிய நான்கு இந்தியர்களை கடந்த மாதம் கைது செய்தனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கனடா நாட்டின் உளவு அமைப்பு தலைவர் டேவிட் இந்தியாவிற்கு இருமுறை ரகசிய பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

அதாவது இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, கனடா நாட்டின் உளவு அமைப்பு தலைவரான டேவிட் விக்னால்ட் இந்தியாவிற்கு இருமுறை ரகசிய பயணம் மேற்கொண்டதாக கனடா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த பயணத்தில் நடந்த சந்திப்புகள் குறித்து தங்களால் கூற முடியாது என்றும், ஹர்தீப் சிங்கின் வழக்கில் தங்களால் முடிந்த அனைத்து தகவல்களையும், இந்தியாவிற்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், ஹர்தீப் சிங்கின் கொலை வழக்கு தொடர்பாக பல கோணங்களில் பல அம்சங்களை பற்றி விவாதிப்பதற்கு டேவிட் விக்னால்ட்டை தவிர வேறு சில கனடா அதிகாரிகளும் இந்த ஆண்டு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் இந்த வழக்கு தொடர்பான எந்த குறிப்பிட்ட தகவல்களும் கனடாவிலிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை என இந்தியா அதிகாரப்பூர்வமாக கூறி வருகிறது. 

Tags:    

Similar News