தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் : பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீஸார் வேண்டுகோள்!
டெக்னாலஜியில் எந்த அளவிற்கு ஒரு முன்னேற்றத்தை கண்டு வருகிறோமோ, அந்த அளவிற்கு சைபர் கிரைம் குற்றங்களையும் சந்தித்து வருகிறோம். வங்கி என்ற பெயரிலும், தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு மூலம் ஓடிபி, வங்கி கணக்கு எண் குறித்த விவரங்களை கேட்டால் கூற கூடாது என்பது வங்கிகள் தரப்பில் கூறப்படும் ஒரு முக்கிய அறிவிப்பு. ஆனாலும் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
அந்த வகையில் சமீப காலமாக உங்கள் மகள் மற்றும் மகன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க உடனடியாக வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என மிரட்டி பணம் பறிக்கும் சம்பவமும் நடக்கிறது. அதுமட்டுமின்றி உங்கள் பெயரில் வெளிநாடுகளுக்கு பார்சல் ஒன்று சென்றுள்ளது. அதில் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பையில் ஒருவரை கைது செய்துள்ளோம், உங்களுடைய ஆதார் எண்ணில் பத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. உங்களிடம் சி.பி.ஐ அதிகாரி ஸ்கைப் காலில் விசாரணைக்கு வருவார், என புதிய புதிய கதைகளை கட்டி மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
மேலும் இவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் பொழுது அவர்களை சுற்றி வாக்கி டாக்கி மற்றும் சைரன் சத்தம் போன்றவை கேட்டாலும், அதனை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, இன்றைய மிக முக்கிய சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்றவற்றிலும் இது போன்ற மிரட்டல்கள் மற்றும் பல பண மோசடிகள் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் நடக்கின்ற இத்தகைய சைபர் கிரைம் குற்றங்களை மாநில சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.