ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து அச்சத்தில் இருக்கும் இந்து பண்டிட்கள்-பாதுகாப்பு வழங்கும் இந்திய ராணுவம்!
ஜம்முவில் இருந்து 176 பஸ்களில் புறப்பட்ட ஐந்தாயிரம் பண்டிட்களுக்கு இந்திய ராணுவம் பலத்த பாதுகாப்பு வழங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சுந்தர் பால் மாவட்டம் துல்முல்லா கிராமத்தின் கீர் பவானி அல்லது ரங்யா தேவி கோயில் உள்ளது. தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீர் பவானியை காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அங்கு வரும் 14-ஆம் தேதி வருடாந்திர திருவிழா நடைபெற உள்ளது . இந்த ஆண்டு திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் உட்பட 80,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
இவ்விழாவை முன்னிட்டு காஷ்மீருக்கு வரும் இந்துக்கள் குப்வாரா மாவட்டம் டிக்கர் அனந்த்நாக் மாவட்டம் லக்த்திபோரா அய்ஸ்முகம், குல்கா மாவட்டத்தின் மாதா திரிபுரசுந்தரி தேசர் மற்றும் மாதா கீர் பவானி மன்ஸ்கம் ஆகிய கோயில்களுக்கும் செல்வார்கள். இதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஜம்முவின் நக்ரோட்டா பகுதியில் இருந்து சுமார் 5,000 இந்துக்கள் 176 பஸ்களில் கீர்பவானி கோயிலுக்கு நேற்று புறப்பட்டனர்.
ஜம்மு மண்டல ஆணையர் ரமேஷ் குமார் நிவாரணப் பிரிவு ஆணையர் டாக்டர் அரவிந்த் கர்வாணி மற்றும் முக்கிய காஷ்மீர் பண்டிட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நாலு நாள் புனிதப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பஸ்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மூன்று தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன .கடந்த ஒன்பதாம் தேதி ஷிங்கேரி கோயிலில் இருந்து கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பஸ்ஸில் புறப்பட்ட யாத்திரிகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் .