குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: அசுரவேகத்தில் களத்தில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை- பிரதமர் மோடி இரங்கல்!
குவைத் நாட்டின் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 49 இந்தியர்கள் உயிரிழந்தனர். பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் தென்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குவைத் நாட்டின் தெற்கு அகமது மாகாணத்தில் மங்கஃப் நகரம் உள்ளது. இங்கு ஆறு மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 150-கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை ஆறு மணியளவில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள ஒரு சமையலறையில் தீ பற்றியது.
இந்த தீ மலமவென கட்டிடம் முழுவதும் பரவியதில் உள்ளே பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் தெரிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் குவைத் நகரில் நடந்த தீ விபத்து மிகவும் துயரம் தந்திருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மத்திய வெளியுறவு துறைத் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் குவைத் தீ விபத்து பற்றிய செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் தூதர் அங்கு விரைந்துள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் தூதரகம் முழு அளவில் உதவிகளை செய்யும் என்று கூறி இருந்தார்.இந் நிலையில் குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் வைக்கா நிலைமையை மதிப்பிடுவதற்காக தீ விபத்து ஏற்பட்ட மங்கஃப் பகுதிக்கு விரைந்தார்.