தமிழக நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பருப்பு கொள்முதலில் ஊழலா?
தமிழக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் விலையில் ஊழல் நடக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில் வழங்க 20,000 டன் கனடா மஞ்சள் பருப்பு வாங்க முடிவு செய்துள்ள தமிழக அரசின் நுகர் பொருள் வாணிபக் கழகம் கிலோவுக்கு 165 விலை தரவுள்ளது. இதன் சந்தை விலையே 130 ரூபாய் தான் .அதனால் தயக்கம் காட்டும் அதிகாரிகளுக்கு அந்த விலைக் கனடா பருப்பு வாங்குமாறு துறை அதிகாரிகளுக்கு மேல் மட்டத்தில் இருந்து நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் இருக்கிறது. இதற்காக தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகம் 20,000 டன் துவரம் பருப்பு, அல்லது கனடா மஞ்சள் பருப்பு , 2 கோடி லிட்டர் பாமாயில் வாங்க கடந்த ஏழாம் தேதி டெண்டர் கோரியது.
துவரம் பருப்பு, கனடா பருப்பு டெண்டரில் தலா 3 நிறுவனங்களும் இறக்குமதி துவரம் பருப்புக்கு ஒரு நிறுவனமும் பங்கேற்றுள்ளன. அவை வழங்கிய விலை புள்ளிகள் சென்னை கீழ்பாக்கம் நுகர் பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. அதில் கிலோ துவரம் பருப்புக்கு குறைந்த விலையாக 189 ரூபாய், இறக்குமதி துவரம் பருப்புக்கு 179 ரூபாய், கனடா பருப்புக்கு 165 என நிறுவனங்கள் விலை புள்ளி வழங்கியுள்ளன .வெளிச்சந்தையில் தற்போது துவரம் பருப்பு விலை 170 ரூபாயாகவும் கனடா பருப்பு விலை 130 ரூபாய் ஆகவும் உள்ளன.
இதனால் அதிக விலை கிடைத்த டெண்டரை ரத்து செய்துவிட்டு மறு டெண்டர் கோர அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் துறையின் உயர்மட்டத்தில் உள்ள சிலர் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திடம் இருந்து கனடா மஞ்சள் பருப்பை வாங்குமாறு அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது :-
தமிழக ரேஷன் கடைகளில் மட்டும் கனடா பருப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த பருப்பு வாங்கப்படுவதில்லை. தமிழகத்தில் மட்டும் செயற்கையாகவே துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு கனடா பருப்பு வாங்கப்படுகிறது. இதற்காகவே சில நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்கு அதை வாங்கி அரசுக்கு அதிக விலைக்கு விற்கின்றன. அந் நிறுவனங்கள் பல ஆயிரம் டன் கனடா பருப்பை இறக்குமதி செய்து இருப்பு வைத்துள்ளன. கடந்த மாதம் 20,000 டன் பருப்பு வாங்க டெண்டர் நடந்தது. அதில் கனடா பருப்புக்கு 163 ரூபாயும் துவரம் பருப்புக்கு 165 ரூபாயும் விலைப்புள்ளி கிடைத்தது.