தமிழகத்தில் மளிகை கடை, உணவகம் போன்ற அனைத்து வியாபார நடவடிக்கைகளிலும் சுமார் 37 லட்சம் வணிகர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கான தீர்வு வழங்கவும், வணிகர்களுக்கு வேண்டிய நிதி உதவி போன்ற திட்டங்களை செயல்படுத்தவும், தமிழக அரசு சார்பில் வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வாரியம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வணிகர் நல வாரியத்தில் ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை என வணிகர்கள் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதாவது கடந்த 2023 ஜூலை மாதத்தில், வணிகர் நல வாரிய தலைவராக முதல்வர், துணை தலைவராக வணிகர் வரி துறை அமைச்சர் மற்றும் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக துறைச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டு, மேலும் அமைப்புசாரா உறுப்பினர்களாக 30 பேரை தமிழக அரசு நியமித்தது. ஆனால் இந்த வாரியத்திற்கான கூட்டம் இதுவரை நடத்தப்படவே இல்லை என்று தமிழக அரசின் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் இது குறித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, வணிகர் நல வாரியத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பெருவெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமெனவும் தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
எனினும், வணிகர்களை கை தூக்கி விட இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை; கூட்டமும் நடத்தப்படவில்லை. மேலும், கூட்டம் நடத்துவதற்கு அதிகாரிகளிடம் கேட்ட பொழுதும் தேர்தல் முடிந்ததும் நடத்துவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடத்தவில்லை. ஆகவே விரைவில் வணிகர் நல வாரிய அமைப்பின் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.