தமிழகத்திற்கு மீண்டும் இரண்டு "வந்தே பாரத்" இரயில்கள்.. வழங்க உள்ள மோடி அரசு..
பிரதமர் மோடி 3 வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை தந்து, சென்னை- நாகர்கோவில், மற்றும் மதுரை பெங்களூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் மதுரையிலிருந்து பெங்களூரு வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. வருகின்ற ஜூன் 20ஆம் தேதி ஒரே நாளில் சென்னை-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூர் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று முன்தினம் ஜூன் 17-ஆம் தேதி அதிகாலை மதுரையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக பெங்களூரை சென்று அடைந்து சோதனை ஓட்டத்தை நிறைவு செய்து இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை- கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர், சென்னை- விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மதுரை- பெங்களூரு பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் ரயில், முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy:News