உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய திமுக! மீண்டும் பாரபட்சம் காட்ட தொடங்கிய மாடல் அரசு! வலுக்கும் விமர்சனங்கள்!
எந்த மாநிலங்களிலும் நிகழாத ஒன்று தமிழகத்தில் தான் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. அதாவது இந்து கோவில்களை நிர்வகிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை நிர்வகிப்பதற்கு எந்த ஒரு அரசின் கட்டமைப்பும் அமைக்கப்படவில்லை. தைரியம் இருந்தால் அனைத்து மதத்திற்கும் ஒரே மாதிரியான கட்டமைப்புகளை அமையுங்கள் என்று சமீபத்தில் மன்னார்குடி ஜீயர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக குற்றம் சாடி இருந்தார். அதேபோன்று இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு பெயரில் இந்து கோவில்களின் சொத்துக்களை தமிழக அரசு திருடுவதாகவும், அரசு ஊழியர்களே கோவில் சொத்துக்களை பயன்படுத்துவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்க வேல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
மேலும், பழமையான தொன்மையான ஐந்தாயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகளையும், தொன்மைகளையும் அழித்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை புதுப்பிக்க கூடாது. தொல்லியல் துறை தான் புதுப்பிக்க வேண்டும் என்று முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வலியுறுத்தினார்.
இதைத் தவிர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தில் முக்கிய நம்பிக்கையாக விளங்கி வருகின்ற சனாதனத்தை வேரோடு அழிப்பேன் என்று உரக்க கூறினார். இந்த நிலையில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த ஜூன் 20 அன்று தொடங்கிய சட்டமன்ற கூட்ட தொடரில், 10 புதிய திட்டங்களை வெளியிட்டார். அதில் முதல் முறை ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஹஜ் மானியத்தை 2022க்குள் நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இது அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் குரானின் போதனைகளுக்கு முரணானது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு ஹஜ் மானியம் வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது. இருப்பினும் தமிழக அரசு ஹஜ் யாத்திரிகர்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. மேலும் இந்த மானியத்தை சமீபத்தில் உயர்த்தியும் உள்ளது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.