இளைஞர்களை தெளிவு நோக்கி நகர்த்துகிறது சத்குருவின் லாஜிக்கலான பதில்கள்! கர்மா புத்தக அறிமுக விழா!
ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் நேற்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய திருமதி.பாரதி பாஸ்கர், "இன்றைய இளைஞர்கள் நம் புராணங்களில் இருந்து எழுப்புகிற கேள்விகளை புறக்கணிக்காமல், அவர்களுக்கு புரியும் வகையில் லாஜிக்கலாக சத்குரு அவர்கள் சொல்லும் பதில்கள் என்னை பெரிதும் கவர்ந்தது, இது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிகத் தேவையானதாக இருக்கிறது. அது குழம்புகிற அவர்களின் மனங்களை தெளிவு என்கிற பாதையில் செலுத்துகிறது " எனக் கூறினார்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று மாலை நடைப்பெற்ற இந்த விழாவில் புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும், நடிகருமான திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்கள் வெளியிட, அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.எம்.முரளி அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து கலைமாமணி திரு.மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்த சிறப்புரையை வழங்கினர்.
இவ்விழாவில் சுஹாசினி அவர்கள் பேசியதாவது, "என் வீட்டில் நான் தான் பொல்லாதவள், ஆனால் என் அளவிற்கான வெற்றி நல்லவர்களுக்கு கிடைக்கவில்லை. எனில் கர்மா என்றால் என்ன? என்பது போன்ற பல கேள்விகள் எனக்கு உண்டு. இது போல பலருக்கும் இருக்கும் பல கேள்விகளுக்கான பதிலை இந்த புத்தகத்தை படித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என கூறினார்.
அதைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரை ஆற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பேசுகையில், "ஒரு செயல் நிஜத்தில் நடப்பதை காட்டிலும் எண்ணத்தால் நடக்கிற போது அதற்கு அடர்த்தி அதிகம் என்கிறார் சத்குரு. இதை தான் திருவள்ளுவர் 'உள்ளத்தால் உள்ளலும் தீதே' - அதாவது மனதால் நினைப்பது தான் அதிக கர்ம வினைகளை ஏற்படுத்தும் என்கிறார். மேலும், பல காலமாக 'இன்னாது அம்ம, இவ்வுலகம்; இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே' என்ற சங்க இலக்கிய பாடல் வரி புரியாமல் இருந்தது.