நீட் தேர்வை தடை செய்ய திமுகவின் கபட நாடகம்- பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
நீட் தேர்வை தொடர்ந்து திமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வை எதிர்ப்பதில் திமுகவின் அரசியல் உள்நோக்கம் என்ன என்பது பற்றி திமுக மட்டுமே அறிந்த ரகசியம்.;
தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் "மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதோடு தேசிய அளவில் இந்த தேர்வு முறையை ரத்து செய்து விட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் இருக்கக் கூடாது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவமாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட முன்வரைவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இது நாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு முறையை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் .
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன் வரைவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதுடன் தேசிய அளவில் நீட் தேர்வு முறையை கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் உரிய திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும் .தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.