பிரதமர் மோடியின் பிறந்தநாளில் பெண்களுக்கென அருமையான 'சுபத்ரா திட்டம்' - ஒடிசாவில் தொடக்கம்!
பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று பெண்களுக்கு நிபந்தனை இன்றி 50,000 வழங்கும் சுபத்ரா திட்டத்தை ஒடிசாவில் தொடங்கி வைக்கிறார்.;
பொருளாதார நிபந்தனை எதுவும் இன்றி பெண்களுக்குத் தலா ₹50,000 வழங்கும் சுபத்ரா திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி ஒடிசாவில் தொடங்கி வைக்கிறார். சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய்1000, ரூபாய் 2000 என உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்குவோம் என மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.
நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தியதில் பாஜக அளித்த வாக்குறுதிகளுக்கு குறிப்பாக சுபத்ரா திட்டத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார நிபந்தனை எதுவும் இன்றி பெண்களுக்கு ரூபாய் 50,000 வழங்குவோமென பாஜக வாக்குறுதி அளித்து இருந்தது. இதுதான் சுபத்ரா திட்டமாகும். ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக தெரிவித்திருந்தது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் நடைபெற்ற முதலாவது மந்திரி சபையிலேயே சுபத்ரா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை மோகன் சரண் மாஜி சந்தித்துப் பேசினார். திட்டத்தை தொடங்கி வைக்க ஒடிசாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு மோகன் சரண் மாஜி அழைப்பு விடுத்தார். இதைப் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். வருகிற செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி பிரதமர் மோடி 75 - வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். அன்றைய தினம் ஒடிசாவில் நடைபெறும் மகத்தான விழாவில் சுபத்ரா திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவில் அமலாக்குவதை போல சுபத்ரா திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது.
SOURCE :Newspaper