என்.ஐ.ஏ அதிரடி சோதனை..! தமிழகத்தில் அதிகமாகும் பயங்கரவாத அமைப்பினர் நடமாட்டம்!
தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மொபைல் போன்கள், லேப்டாப்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஹிஸ்புத் தஹ்ரீர், கிலாஃபா, இஸ்லாமிய அரசு மற்றும் அதன் நிதி அமைப்புகளின் சித்தாந்தத்தை கோடிட்டு காட்டும் புத்தகங்கள் மற்றும் அச்சு பிரதிகள் போன்ற பல ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதாவது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் நடந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனையை என்.ஐ.ஏ மேற்கொண்டது. அதன்படியே என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி உள்ளது. இதனை அடுத்து ஹிஸ்புத் தஹ்ரிர் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இரு நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்பது ஒரு சர்வதேச பான்-இஸ்லாமிய மற்றும் அடிப்படைவாதக் குழுவாகும், இது இஸ்லாமிய கலிபாவை மீண்டும் நிறுவுவதற்கும், குழுவின் நிறுவனர் தகி அல்-தின் அல்-நபானியால் எழுதப்பட்ட அரசியலமைப்பை அமல்படுத்தவும் உறுதி கொண்டுள்ளது. மேலும் இவர்கள் இளைஞர்களை தீவிரவாதிகளாக ஆக்குவதற்கும், தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறையை இஸ்லாத்திற்கு எதிரானதாக சித்தரிப்பதற்கும் ரகசிய வகுப்புகளை நடத்தியது என்.ஐ.ஏவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.