புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததால் பலன்கள் - ஒரு பார்வை!
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததால் அனைத்து வழக்குகளிலும் வழக்கு பதிவான மூன்று ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட்டில் கூட தீர்ப்பு வந்துவிடும் என்று அமித்ஷா கூறினார்.;
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தால் அனைத்து வழக்குகளிலும் வழக்கு பதிவான மூன்று ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட்டில் கூட தீர்ப்பு வந்துவிடும் என்று அமித்ஷா கூறினார். நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன. இதை ஒட்டி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
முந்தைய காலனி ஆட்சிக்கால சட்டங்கள் தண்டனை நடவடிக்கையில் மட்டுமே குறியாக இருந்தன . ஆனால் இந்த புதிய சட்டங்கள் நீதி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. குற்றச்சம்பவங்கள் பற்றி புகார் அளிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. பூஜ்ய எஃப்.ஐ.ஆர் ஆகியவற்றால் போலீஸ் நிலையத்திற்கு நேரில் செல்லாமலே புகார் அளிக்கலாம். போலீஸ் நிலைய எல்லையைப் பற்றி கவலைப்படாமல் எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். புதிய குற்றவியல் சட்டங்கள் அதிநவீன குற்றவியல் நீதி முறையில் கொண்டுவரப்பட்டுள்ளன.
பூஜ்ய எப்.ஐ.ஆர் , ஆன்லைனில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தல், சம்மன்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்புதல், குற்றம் நடந்த இடங்களில் கட்டாய வீடியோ பதிவு ஆகியவற்றால் உலகிலேயே அதிநவீன குற்றவியல் நீதிமுறையைக் கொண்டதாக இந்தியா மாறுகிறது. புதிய சட்டங்கள் அமலாக்கத்தால் அனைத்து வழக்குகளிலும் வழக்கு பதிவான மூன்று ஆண்டுகளுக்குள் கீழ் கோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை தீர்ப்பு வந்துவிடும். இச்சட்டங்கள் நீண்ட தாமதத்திற்கு முடிவு கட்டி நீதித்துறைக்கு கால வரையறை நிர்ணயிக்கிறது. வழக்கு விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் குற்றவியல் வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட வேண்டும். முதல் வாதம் தொடங்கிய 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும். இச்சட்டங்களால் 90% குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் என்பதால் எதிர்காலத்தில் குற்றச்செயல்கள் குறையும். சிறிய குற்றங்களுக்கு சமுதாய சேவை தான் தண்டனையாக அளிக்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய குற்றங்களில் ஏழு நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும் . கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் அவரது பாதுகாவலரின் முன்னிலையில் பெண் போலீஸ் அதிகாரியால் பதிவு செய்யப்படும் . குழந்தையை விற்பதோ வாங்குவதோ கொடிய குற்றமாக கருதப்படும். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ளும் செயலுக்கு எதிராக புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.