குடிமகன்களை திருத்த முடியாமலும் மது விலக்கை அமல்படுத்த முடியாமலும் திமுக அரசு யோசித்து வரும் மாற்று வழி கேலி கூத்து!

கள்ளச்சாராயம் அருந்தி உயிர்கள் பலியாவதை தடுக்கவும், மிகப்பெரிய வருவாயாக இருக்கும் மதுவை ஒழிக்க முடியாமலும் டாஸ்மாக்கில் 100 மில்லி மது பாட்டில் அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.;

Update: 2024-07-04 14:53 GMT

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது. கள்ளச்சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் காவு வாங்கப்பட்ட நிலையில், மது விற்பனையையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடிக்கத் துவங்கிவிட்டன.டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், கூலி வேலை செய்பவர்களால், அதை வாங்கி குடிக்க முடியாமல்தான், கள்ளச்சாராயம் குடித்து பலர் இறக்க நேரிடுகிறது. அதனால், குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று மற்றொருபுறம் எதிர்ப்பு குரல்களும் வெடித்துள்ளன.

இதனிடையே, கூலித்தொழிலாளர்களும் எளிதில் வாங்கி குடிக்கும் வகையில் கட்டிங் பாட்டில்களை,  குறைந்த அளவில் விற்பனை செய்ய தமிழக அரசு யோசித்து வருவதாகவும், 90 மில்லி  டெட்ரா பேக் என்று சொல்லப்படும் காகிதக் குடுவையில் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், இதற்கு பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.

தமிழகத்தில் மது விலக்கு இப்போது இல்லை என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது வாங்குவதற்கு ஏற்ற வகையில் மலிவு விலை மது விற்பனையைத் தொடங்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதாவது, டெட்ரா பேக் மூலம் மதுபான வசதிகளை ஏற்படுத்த வேண்டுமானால், மாதக்கணக்கில் கால அவகாசம் தேவைப்படும். அந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் 100 மி.லிட்டர் கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவிற்பனை செய்யலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறதாம்.இதில் 100 மி.லி பிளாஸ்டிக் பாட்டில்தான் சிறந்தது என்றும் தமிழக அரசு நினைக்கிறதாம். ஆனால், இப்போதைக்கு இவையெல்லாம் வெறும் பரிசீலனையில் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை.

ஆனால், 100 மி.லி மதுவை சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் குறைந்த விலைக்கு விற்க முடியும் என்று தமிழக அரசு நம்புவதாகத் தெரிகிறது.இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், இதன் விலை ரூ.50 முதல் ரூ.80க்குள் அடங்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த உரிய முடிவுகளை அரசு எடுத்த பிறகே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றாலும், இந்த தகவல்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.


SOURCE :News

Tags:    

Similar News