விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் தமிழகப் பயனாளிகளை இணைக்காமல் அலட்சியம் செய்து, துரோகம் செய்த திமுக அரசு!
விவசாயிகளுக்கான பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் தமிழகப் பயனாளிகளை இணைக்காமல் அலட்சியம் செய்து வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கும் விரோதச் செயலும் பற்றி காண்போம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் நலனுக்காக சொந்த நிலங்களில் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி உள்ளார். இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொரு விவசாயியின் வங்கி கணக்கிலும் 17 தவணைகளாக 34,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 10,435 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 2015-16ஆம் ஆண்டு விவசாயக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மொத்தம் 79.38 லட்சம் விவசாயிகள் உள்ளதாகவும் , இவர்களில் சுமார் 39 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் நிதிபெற தகுதி உடையவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. ஆனால் தமிழகத்தில் உண்மையான விவசாயிகளை இந்த திட்டத்தில் இணைக்காமல் சுமார் 7 லட்சம் போலியான நபர்களை இந்த திட்டத்தில் இணைத்து பலநூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டு அவர்களின் பெயர்கள் இந்த திட்டத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டன .
ஆனால் தகுதியுடைய உண்மையான விவசாயிகளை இணைக்கும் பணி நடைபெறவில்லை. கடந்த 2020-21 ஆண்டுகளில் சுமார் 44 லட்சம் பேர் பலனடைந்தனர். இந்த திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயன் அடைகிறார்கள். சுமார் 23 லட்சம் பயனாளிகள் திமுக அரசால் விவசாயிகள் உதவித்தொகை பெறுவதில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். 23 லட்சம் பேரும் விவசாயிகள் இல்லை என்றால் இந்த மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை என்ன?