தமிழ்நாட்டிற்கு வரப் பிரசாதமாக மாறப்போகும் புதிய கடல் வழித்திட்டம்... தமிழ் இளைஞர்களுக்காக பிரதமரின் தொலைநோக்கு பார்வை!

Update: 2024-07-15 16:17 GMT

2019 ஆண்டில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தில் சென்னை - விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் ஒரு முக்கிய விஷயமாக விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் பிரதமர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய பொழுதும் இந்த கடல் வழி திட்டம் செயல்படுத்துவதற்கான அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தது. அதாவது 5,647 கடல் மைல்கள் அல்லது 10,500 கி.மீ தொலைவு கொண்ட இந்த கடல் வழித்தடம் இந்தியாவின் சென்னை மற்றும் ரஷ்யாவின் தூர கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள விளாடிவோஸ்டாக் ஆகிய இரு துறைமுகங்களை இணைக்கும். 

முன்னதாக தற்போது இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக வழித்தடம் மும்பை - ரஷ்யாவின் மேற்கில் உள்ள செயின்ட் பீட்டர் பாக்ஸ் துறைமுகத்திற்கு இடையே நிகழ்கிறது. ஆனால் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட கடல் வழித்தடமானது 8,675 கடல் மைல்கள் அல்லது 16,000 கிலோ மீட்டர் தொலைவுடையது. அதனால் இவ்வழியே பொருட்களைக் கொண்டு செல்வதற்கு சுமார் 40 நாட்களாகிறது. 


இதுவே, சென்னை - விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் பயன்பாட்டிற்கு வருமேயானால், இரண்டிற்கும் இடையேயான தூரம் 10,500 கி.மீ மட்டுமே! அதனால் இவ்வழித்தடம் மூலம் பொருட்களை 16 நாட்களுக்கு முன்னதாகவே இரு தரப்பிலும் கொண்டு சேர்த்து விடலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த புதிய வழித்தடத்தின் மூலம் இந்தியா மற்றும் ரஷ்யா பயனடைவது மட்டுமின்றி பல புதிய வர்த்தகங்களும் இருநாட்டிற்கும் திறக்க பல வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சென்னை துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்த், வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வர்த்தகமும் தொழில் வாய்ப்புகளும் பெருகும். 

இந்த திட்டம் கடந்த 2019 முன்மொழியபட்ட சமயத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் சூழ்நிலைகளை பொறுத்து தான் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறி வந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் சூழல் சுமூகமாகவும், நல்ல உறவு முறையும் நீடித்து வருவதால், இந்த திட்டம் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது. 

அதனால், தற்போது ஐரோப்பியாவிற்கு வெளியே எரிபொருளுக்கு புதிய வாடிக்கையாளர்களை தேடும் ரஷ்யாவும், எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கு, தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய கூட்டாளிகளை தேடும் இந்தியாவும் இந்த கடல் வழித்தடம் மூலம் பரஸ்பர பலன்களைப் பெற முடியும் என்றும், கச்சா எண்ணெய், நிலக்கரி, எல்.பி.ஜி, எரிவாயு மற்றும் தொழில் துறைக்கு தேவையான கச்சா பொருட்களை ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்ய முடியும். அதுவும் இந்த கடல் வழித்தடமானது சென்னையில் அமையுள்ளதால் மும்பையை போல சென்னையும் வலுவான பொருளாதாரம் மையமாக உருவாகும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதுமட்டுமின்றி எப்படி ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறதோ அதேபோன்று இந்தியாவிலிருந்து கட்டுமான பொருட்கள், பார்மாசூட்டிகல் தயாரிப்புகள் மற்றும் தொழில்துறை உற்பத்தி பொருட்கள் போன்றவற்றை ரஷ்யாவும் இறக்குமதி செய்து கொள்ளும், இதனால் இயல்பாகவே வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். நேரமும், தூரமும் மிச்சப்படுத்தப்படுவதால் பொருட்கள் மீதான செலவுகளும் குறையும், உற்பத்தி பொருட்களின் விலையும் குறையும் என்றும் கூறுகின்றனர். மேலும் இந்தியாவுடன் ரஷ்யாவின் இந்த வர்த்தகம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயரவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக விளாடிவோஸ்டாக் நகரில் இந்தியா தனது துணை தூதரகத்தையும் திறந்துள்ளது. இந்த நகரில் தூதரகத்தை தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. 

குறிப்பாக இந்த கடல் வழித்தடம் சென்னையை அடைவதால் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மட்டுமின்றி நிலத்தால் சூழப்பட்ட மங்கோலியாவிற்கு கூட இந்தியாவில் இருந்து சரக்குகளை அனுப்ப முடியும், தமிழ்நாட்டின் தொழில் வர்த்தகம் பெருகுவதோடு, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் குவியும்! இதனை கருத்தில் வைத்து 2019ல் இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முனைப்பு காட்டி வருகிறார். 


Tags:    

Similar News