இந்தியாவில் முதல்முறையாக நடக்கும் உலக மரபுக் குழுவின் கூட்டம்- பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்!
உலக மரபுக் குழுவின் கூட்டம் இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது.
இம்மாதம் 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை உலக மரபுக் குழுவின் கூட்டம் இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது. டெல்லியில் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். ஐ.நா சபையின் அங்கமான யுனோஸ்கோ உலக மரபு சின்னங்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஹுமாயூன் சமாதி, குதுப்மினார், பீகாரில் உள்ள புராதன நாளந்தா பல்கலைக்கழக சிதைவுகள் மற்றும் மகாபோதி ஆலயம், மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதன் உட்பட மொத்தம் 42 சின்னங்களுக்கு உலக மரபுக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஆறாவது நாடாக உள்ளது. இத்தாலி, ஸ்பெயின் ,ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், ஆகிய நாடுகளில் மரபுக் குழுவின் அங்கீகாரம் பெற்றுள்ள சின்னங்கள் இந்தியாவைக் காட்டிலும் அதிகம் உள்ளன. இந்நிலையில் யுனோஸ்கோவின் உலக மரபுக் குழு இந்தியாவில் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி குழுவின் 46-வது அமர்வு டெல்லியில் இம்மாதம் 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் பொழுது அபூர்வ கலை படைப்புகளும் சிற்பங்களும் காட்சிப்படுத்தப்படும். டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமர் மோடி இந்நிகழ்வை நாளை தொடங்கி வைக்கிறார். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்று கருத்து பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.
SOURCE :News