ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - பிரதமர் மோடி வாழ்த்து!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.

Update: 2024-07-28 16:23 GMT

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றதன் மூலம் 140 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

நேற்று நடந்த தகுதிச்சுற்றுப் போட்டியில் மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து இன்றைய இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். சற்று முன் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்தப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஓ யீ ஜின் 243.2 புள்ளிகள் சேர்த்து தங்கமும், மற்றொரு தென் கொரிய வீராங்கனை கிம் யெஜி 241.3 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

மனு பாக்கர் ஒலிம்பிக் பதக்கம் வென்றதும், செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை ராம் கிஷன் பாக்கர், "மனுவை நினைத்து நாடே பெருமிதம் கொள்கிறது. அவர் பங்கு பெற வேண்டிய நிகழ்வுகள் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றில் அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார். மேலும், “மனுவுக்கு அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பிலிருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. நாட்டு மக்களின் ஆசீர்வாதத்தால் மட்டுமே அவர் இதை அடைந்திருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை,” என்றார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் மனு பாக்கர் இந்தியாவின் முதல் பதக்கத்தை (வெண்கலம்) வென்றதற்காக வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது" என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

Similar News